சென்னை: தமிழைக் காப்பதற்காக 'தமிழைத்தேடி...' என்ற இயக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அடித்தட்டு மக்களிடம்கூட பிறமொழிக் கலப்பின்றி உரையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே தமிழைத் தேடி இயக்கத்தின் வெற்றிதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கம். அது நிறைவேற உழைக்க வேண்டியது அனைவரின் கடமை. குறிப்பாக, தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பெரும் பங்கு இருக்க வேண்டும்.
"உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணிசெய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான்தேர் இழுக்க வேண்டும்," என்று திரு.ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஒன்றாக கைகோத்துச் செயல்்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அவர், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாகத் தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

