செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஐரோப்பிய நாடுகளைப்போல் தமிழகத்திலும் புத்தக நாள்

சென்னை: ஐரோப்பிய நாடுகளில் புத்தக நாள் கொண்டாடப்படுவதைப்போல் ஒரு நிலை தமிழகத்திலும் உருவாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்ற நிலை மாறும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். "மதுரையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அதை மிக விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். சிறந்த எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குளிரூட்டி பழுதானதால் ஆத்திரம்; விரைவு ரயிலை நிறுத்திய பயணிகள்

சென்னை: அதிவிரைவு ரயிலில் குளிரூட்டி இயங்காததால் கோபமடைந்த பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். விரைந்து வந்்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, பயணிகள் விவரம் தெரிவித்தனர். சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஹூப்ரி நகருக்கு இயக்கப்படும் ரயிலில் குளிரூட்டி பழுதடைந்திருந்தது. இதையடுத்து குளிரூட்டி ஏற்பட்ட பழுது பத்து நிமிடங்களில் சரிசெய்யப்பட்டது. இதன் காரணமாக நான்கு ரயில்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

அமைச்சர்: திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதியில்லை

சென்னை: திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விருந்து நிகழ்ச்சிகள், விளையாட்டுத் திடல்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு அரசாணை வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், செய்தியாளர்களிடம்

பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண நிகழ்ச்சி

களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படாது என்றார். ஐபிஎல் போன்ற அனைத்துலகப் போட்டிகள், நிகழ்வுகளில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுகின்றன.

தண்டவாளத்தில் படுத்திருந்தோர்மீது ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு

திருப்பூர்: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மூன்று இளையர்களில் இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 17 முதல் 24 வயதுக்குட்பட்ட அம்மூவரும் நேற்று முன்னம் இரவு திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு மாரியம்மன் கோவில் திருவிழாவைக் காணச் சென்றிருந்தனர். பின்னர் நள்ளிரவில் ஊர் திரும்பியபோது, அசதி காரணமாக

ரயில் தண்டவாளத்தில் படுத்து ஓய்வெடுத்தனர். அப்போது அவ்வழியே சென்ற விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இரு இளையர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.