சென்னை: இந்தியாவின் மத்திய நீர்வள அமைச்சகம் முதன்முதலாக நாடளாவிய அளவில் ஏரிகளை உள்ளடக்கி ஆய்வுஒன்றை நடத்தியது.
நாட்டிலேயே ஆக அதிக ஏரிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
தமிழ்நாட்டில் 13,629 ஏரிகள் இருப்பதாக அந்த நீர்ப்பாசன ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் நகர்ப் பகுதிகளிலும் கிராமங்களிலும் உள்ள நீர்நிலைகள், அவற்றின் வகை, நிலைமை, கொள்ளளவு, பயனீடு, ஆக்கிரமிப்பு, சேமிப்பு வளம் முதலான அனைத்தையும் உள்ளடக்கி பரந்த அளவில் அந்த ஆய்வு முதன்முதலாக நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்தியா முழுவதும் 2.4 மில்லி யன் நீர்நிலைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குளம், குட்டைகளைப் பொறுத்தவரை ஆந்திரா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசத்துக்கு அடுத்ததாக தமிழ்நாடு 4வது இடத்தை வகிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 43,847 குளம், குட்டைகள் இருக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சுமார் 1.6% ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த விகிதம் 8% ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாகப் பார்க்கையில், 56,760 நீர்நிலைகள் பயனீட்டில் உள்ளன. பல்வேறு காரணங்களால் 50,197 நீர்நிலைகள் பயன்படாமலேயே இருக்கின்றன.