செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

அலுவலகத்தில் விஏஓ கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணிபுரியும் லூர்து பிரான்சிஸ், 53, என்பவரை நேற்று அவருடைய அலுவலகத்தில் புகுந்து இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.

அந்தக் கொலை தொடர்பில் ராமசுப்பு என்பவர் கைதாகி இருக்கிறார். ராமசுப்பு மீது அந்த அதிகாரி மணல் கடத்தல் புகார் தெரிவித்ததால் இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி பணமும் வீட்டில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் நேற்று அறிவித்தார்.

வளர்ப்பு இறால் பெருத்த சேதம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் இதுபோன்ற இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் இறால் மீன்கள் ஒருவகை வெள்ளைத் திட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக கோடானுகோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். படம்: தமிழக ஊடகம்

புதிய முனையம் செயல்படுகிறது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கப்பட்டது.

மொத்தம் 13.6 மில்லியன் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் காரணமாக சென்னை விமான நிலையம் ஆண்டுக்குச் சுமார் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலுடன் திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மருந்துகள் தரமற்றவை

சென்னை: இந்தியாவில் விற்பனையாகும் மாத்திரை, மருந்துகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன.

கடந்த மார்ச் மாதம் மட்டும் 1,497 வகை மருந்துகள் ஆராயப்பட்டதில் காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், உணவு மண்டல நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவை என்பது தெரியவந்ததாக cdsco.gov.in என்ற இணையத்தளம் தெரிவித்தது. அந்த மருந்துகள் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்றும் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

அனுமன் சிலை திரும்பியது

செந்துறை: அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி ஸ்ரீ வரதராஜப் ெபருமாள் கோயிலில் 2012ஆம் ஆண்டு திருடப்பட்ட சோழர்கால அரியவகை வெண்கல அனுமன் சிலை, கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏலத்தில் விற்கப்பட்டது.

தீவிர முயற்சிகளின் விளைவாக மீட்கப்பட்ட இந்தச் சிலையை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர். படம்: தமிழக ஊடகம்

விராலிமலை, பல்லடம் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை விராலிமலை, பல்லடம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக நடந்தன. விராலிமலை ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

பல்லடம் அருகே அழகுமலை ஜல்லிக்கட்டில் 580 காளைகள் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசுகள் கிடைத்தன.