விருதுநகர்: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி எனும் ஊரில் புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று அவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
அந்நிலையம், ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கிறது.
அதில், பிரசவ அறை, பிரசவ வார்டு, மருத்துவ அலுவலர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம், மருந்தகம், தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
"தமிழகத்தில் தற்போது 18 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் 25 இடங்களில் ரூ.1,038 கோடியில் புதிதாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்," என்று கூறிய அமைச்சர், 63 நகராட்சிகளில் கட்டத் திட்டமிடப்பட்ட 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஏறத்தாழ 500 கட்டி முடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
படம்: இந்திய ஊடகம்