சென்னை: பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து உடனடியாகத் தீர்வுகாண உதவும் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அத்திட்டம் குறித்து சென்னை மாநகராட்சியின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து வடசென்னை பகுதியில் அது தொடங்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் அலுவலகத்தில் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின்விளக்கு, கழிப்பறை, பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சொத்துவரி, தொழில்வரி, குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை ராயபுரம் மண்டலப் பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக அளிக்கலாம்.
இவ்வாறு 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது.

