திருப்பூர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன்குமாரும் அவரது மனைவி கமலினியும் பல்லடம் வட்டார பனியன் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்.
கமலினி இம்மாதம் 22ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் மகவை ஈன்றார்.
மருத்துவமனையில் கமலினியின் படுக்கைக்கு அருகே கருச்சிதைவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த எஸ்தர் ராணி என்பவருக்கு உதவியாக உமா என்பவர் உடனிருந்தார்.
உமா, கமலினிக்கு உதவி செய்யவே அர்ஜூன்குமார் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றார்.
மாலை வேலை முடிந்து திரும்பியபோது, உமா 'இன்குபேட்டர்' சிகிச்சை அளிக்க குழந்தையைக் கேட்டதாகக் கூறி வாங்கிச் சென்றதாக கமலினி கூறினார். ஆனால் உமாவும் எஸ்தர் ராணியும் மருத்துவமனையில் இல்லை எனத் தெரிந்ததும் அர்ஜூன்குமார் காவல்துறையிடம் புகாரளித்தார்.
கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின் உதவியுடன் குழந்தையைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்களை அடையாளம் கண்டு, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடினர்.
பின்னர் கள்ளக்குறிச்சியில் உமாவைக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை 12 மணி நேரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

