அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை: தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு வழக்கமான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது. கண் பரிசோதனை, காது பரிசோதனை போன்றவை அவற்றில் அடங்கும். 50 வயது நிரம்பாத ஓட்டுநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் 50ம் அதற்கு மேற்பட்ட வயதும் நிரம்பியோர் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பரிசோதனையில் தகுதிபெறாவிட்டால் வேறு பணி வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைச்சாவு ஏற்பட்ட ஆடவரின் உடல் உறுப்புகள் ஐவருக்கு தானம்
சென்னை: திண்டிவனத்தைச் சேர்ந்த 40 வயது ஆடவர், சென்ற வாரம் சாலை விபத்தில் படுகாயமுற்றதை அடுத்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆடவரின்
உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் ஆகியவை, தேவைப்படும் ஐந்து நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
தி.நகரில் நாட்டின் ஆக நீண்ட நடைமேம்பாலம் மே மாதம் திறப்பு
சென்னை: சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) 30 கோடி ரூபாய் செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்தியாவின் ஆக நீளமான நடைமேம்பாலமான அது அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 1,968 அடி நீளத்திற்கு 13 அடி அகலத்தில் அந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யுமென முன்னுரைப்பு
சென்னை: தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதம் 30ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தமிழக வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. கோடை வெப்பத்தைத் தணிக்க அது உதவுமெனக் கருதப்படுகிறது.

