சென்னை: தமிழக அரசு அமைத்துள்ள சுவடி திட்ட பணிக் குழு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அரிய ஓலைச்சுவடிகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கருணை ஏடு, பொன்னேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 12 பேர் கொண்ட அக்குழுவின் தலைவரும் பேராசிரியருமான தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழகக் கோவில்களில் இதுவரை 180,247 சுருணை ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட அவர், ஓலைகளை நறுக்காமல் முழு ஓலையின் நடுவில் எழுதி, அவற்றை சுருட்டிக் கட்டும் மரபு பெரும்பாலான கோவில்களில் உள்ளது என்றும் அவற்றை சுருணை ஏடுகள் என்பர் என்றும் விளக்கம் அளித்தார்.
"கருணை ஏடுகளில் கோவில் நிலத்துக்கான ஆவணக் குறிப்புகள், குத்தகை விவரங்கள், திருவிழாக்கள், வழிபாட்டு மரபுகள், தல வரலாறு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பரவலாக தமிழ்ப் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிறமொழி குறிப்புகள் கிடைத்துள்ளன. செப்பேடுகளும் தாள் சுவடிகளும் கிடைத்து வருகின்றன. அவற்றுள் 45,510 சுவடிகளை அந்தந்த கோவில்களிலேயே அறிவியல் முறையில் பராமரித்து பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார் பேராசிரியர் தாமரைப்பாண்டியன்.

