புழல் ஏரியில் நாள்தோறும் கலக்கும் இரண்டு லட்சம் லிட்டர் கழிவுநீர்
சென்னை: சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து காணப்படும் புழல் ஏரியில் நாள்தோறும் இரண்டு லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக புழல் ஏரியில் அதன் மொத்த கொள்ளளவில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க இயலும். இந்நிலையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிட்டால் பின்னர் பெரும் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சுவிரட்டு: இருவர் பலி
சிவகங்கை: கண்டரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை பார்க்கக்கூடிய பார்வையாளர்களில் இருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தனர். மஞ்சுவிரட்டைப் பார்க்க நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். சீறி வந்த காளைகளை அடக்க முற்பட்ட வீரர்களில் அறுபது பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில்
உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் காணப்படும் புதிய பறவை இனம் அனுமன் உப்புக்கொத்தி'
ராமநாதபுரம்: 'அனுமன் உப்புக்கொத்தி' புதிய பறவை இனம் ராமநாதபுரம் பகுதியில் காணப்படுவதாக பறவை ஆய்வாளர் என்.ரவீந்திரன் நடராஜன் தெரிவித்துள்ளார். இவர் தன் நண்பர் எச்.பைஜுவுடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக மன்னார் வளைகுடா பகுதியின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் பறவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், உலகளவில் புதிய பறவை இனமாக அறிவிக்கப்பட்ட அனுமன் உப்புக்கொத்தி பறவைகள், தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதற்குரிய ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் இனப்பெருக்கம் செய்து வசிக்கும் பறவையாக அனுமன் உப்புக்கொத்தி கண்டறியப்பட்டுள்ளது என்றும் தங்களுடைய ஆய்வு நீடித்து வருகிறது என்றும் ரவீந்திரன் நடராஜன் கூறியுள்ளார்.

