மின்வாரிய அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெறும் எனத் தகவல்
சென்னை: அண்மையில் தமிழக மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ரூ.360 கோடி மதிப்புள்ள வைப்பு நிதியும் முக்கிய ஆவணங்களும் மத்திய அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், கடந்த 24ஆம் தேதி அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்புடைய இடங்களிலும் தமிழக மின்பகிர்மான கழகத்துடன் தொடர்புள்ள பத்து இடங்களிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் குறித்து எந்தவிதமான தகவலையும் அமலாக்கத்துறை உடனடியாக வெளியிடவில்லை.
இந்நிலையில், அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 360 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்தியா கார்ப்பரேஷனில் 360 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக இருப்பது தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இலவச மின்சாரம் தொடர்பான முறைகேட்டைத் தடுக்கும் வகையில் விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் கருவிகளைப் பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக்கூடாது என்றும் ஏற்கெனவே இணைப்பு வழங்கி இருந்தால் உடனே மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.