செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஏழு பேர் தப்பியோட்டம்

காஞ்சிபுரம்: குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார் களை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஏழு சிறார்கள் தப்பியோடினர். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கையால் தப்பி ஓடியவர்களில் இருவர் பிடிபட்டனர். மற்றவர்கள் தேடப் படுகிறார்கள். அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் இளஞ்சிறார்களுக்கு அளிக்கப் படும் சலுகைகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதாக வும் இல்ல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கியதில் பாகன் பலி

நீலகிரி: வளர்ப்பு யானைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில், மசினி என்ற யானை தாக்கியதில் அதன் பாகன் பாலன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. கும்கி யானைகள், சவாரிக்குப் பயன்படும் யானைகள் இங்கு பராமரிக்கப் படுகின்றன. நேற்று முன்தினம் மசினி யானைக்கு உணவளித்துள்ளார் அதன் பாகன் பாலன். அப்போது அந்த யானை திடீரென அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாலன் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதே மசினி யானை கடந்த 2019ஆம் ஆண்டு சமயபுரம் கோவிலில் இருந்தபோது தனது பாகனை தாக்கியது. அந்தப் பாகனும் படுகாயம் அடைந்து உயிரிழந்தரா். அதன் பிறகு மசினி யானை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக புகார்: அதிமுக நிர்வாகி கைது

கரூர்: அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவரான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவலடி கார்த்திக் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச் சாட்டில் கைதாகி உள்ளார். 37 வயதான அவர், சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், கரூர் நகர காவல் துறையினர் அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். தகவலறிந்த அதிமுகவினர் பலர் கரூர் நகர காவல் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட ஆறு பேர் கைது

கோவை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்ளிட்ட ஆறு பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று முன்தினம் கோவையில் காவல்துறை யினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாய் பாபா காலனியில் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த வர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கஞ்சா பொட்ட லங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் மூன்று பேர் மீது ஏற்கெனவே கஞ்சா, திருட்டு வழக்குகள் பதிவானது தெரியவந்தது. ஒருவர் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் கல்லூரி மாணவர் எனத் தெரியவந்துள்ளது.

மின்வெட்டு கூடாது என உத்தரவு

கோவை: அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்நிகழ்ச்சிகள் முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி ஒருவர் மின் விநியோகத்தை கண்காணிக்கவும் மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.