புதுடெல்லி: இந்திய அளவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
மாநிலங்களின் கடன் நிலவரம் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக கடன்களை வாங்கியுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
கடந்த 2022-23வது நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும், தமிழக அரசு ரூ.68,000 கோடி கடன் வாங்கி உள்ளது என்றும் தமிழகத்துக்கு அடுத்து ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடி கடன் பெற்றுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ரூ.50,000 கோடி கடன் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.எனினும் கடன் வாங்குவதும் அதிகரித்து வருகிறது.
2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு, 2021-22இல் ரூ.87,000 கோடி கடன் வாங்கி உள்ளது.
அதேசமயம் ஒப்பீட்டு அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும், நடப்பாண்டில் பெறுவது சற்றே குறைந்துள்ளது என்றும் நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழகம் கடன் பெற்றுள்ளது என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவதை வேகமாகக் குறைத்து வருகின்றன. வரி வசூல் அதிகரித்து இருப்பதால் உத்தரப் பிரதேச அரசு கடன் வாங்குவதைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக கடன் வாங்கும் பத்து மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது.

