சென்னை: காவிரியில் அதிக அளவில் கழிவுநீர் கலப்பதாகவும் இதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு.
துரித கதியில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
காவிரியில் கலக்கும் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்வது அவசியம் என்றும் இல்லையெனில் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தமிழக காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்றும் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன் சாக்கடை நீர் ஓடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீரில் பெரும் பகுதி கழிவுநீராகவே உள்ளது என விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.
"காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசு கடந்த 2015ஆம் ஆண்டிலேயே வழக்குத் தொடுத்துள்ளதாக தமிழக காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கூறுகிறார்.
அவ்வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வதாக கர்நாடகா அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது என்றும் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

