கடலூர்: சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை விழிப்புணர்வுப் பாடல்கள் மூலம் வலியுறுத்தி வரும் போக்குவரத்துக் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். போக்கு வரத்து காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடாத வகையில் இவர் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமல்ல, சாலை விழிப்புணர்வு பற்றி பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் சிவபெருமாள்.
தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக் கூடாது, பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் சிவபெருமாளின் விழிப்புணர்வுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
அப்பாடல்கள் வாகனமோட்டிகளையும் பொதுமக்களையும் உற்சாகப்படுத்துகின்றன.
தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கையில் ஒலிபெருக்கி ஏந்தியபடி விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடியபடி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் சிவபெருமாள். அவரது சேவையை உயரதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

