தஞ்சை: தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின்கொள்முதல் ஒப்பந்தம் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.453 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
அதிலும், ஒரு யூனிட் மின்சாரம்கூட அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்கொள்முதல் தொடர்பாக தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் 330.50 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
கடந்த 1997ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வணிகச் செயல்பாடுகள் தொடங்கிய தேதியில் இருந்து முப்பது ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும். எனினும் சில காரணங்களால் இந்த ஒப்பந்த காலம் 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அந்தத் தனியார் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு உரிய விதிமுறைகளின்படி கட்டணம் செலுத்தி மின் கொள்முதல் செய்தது.
பின்னர், 2016 முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்திற்கு குறிப்பிட்ட சில விதிமுறைகளின்படி அந்தத் தனியார் நிறுவனம் எரிபொருள் வழங்கல் தொடர்பான ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கோரியுள்ளது. இதற்கு உரிய அனுமதி இல்லாதபோதும், அன்றைய அரசு அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து 2020 மார்ச் மாதம் முதல் 2021 நவம்பர் வரையில் மின்வாரியம் அந்நிறு வனத்துக்கு ரூ.453.04 கோடி செலுத்தி உள்ளது," என மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.

