21 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தின் முதல் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாப் பிரிவில் மருத்துவச் சுற்றுலாவும் ஒன்று என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்ளாதேஷ், நேப்பாளம், சவூதி அரேபியா, ஓமான், இலங்கை, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த மருத்துவர்கள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரிதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டிற்காக பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் சார்பில் மருத்துவச் சுற்றுலாவுக்காக முதல்முறையாக தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்படுகிறது.
"தமிழகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவச் சுற்றுலாவிற்கான தலமாக வளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் மருத்துவச் சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழகத்தினை அடையாளப்படுத்த மருத்துவத் துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து அனைத்துலக மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
"மருத்துவச் சுற்றுலா மாநாடு உடல்நலம் பேணும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல், கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும்," என்று தமிழக நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக சுற்றுலாத் துறையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்திடவும் தமிழகத்தை முன்னணி மருத்துவச் சுற்றுலாத் தலமாக மாற்றவும் இம்மாநாடு முக்கியப் பங்காற்றும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், இம்மாநாட்டில் பயண ஏற்பாட்டாளர்கள், தங்குவிடுதி நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா மருத்துவர்கள் என 350 பேர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.

