செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

பஞ்சு, நூல்களுக்கான தரக்கட்டுப்பாட்டை தளர்த்த மத்திய அரசுக்கு வலியுறுத்து

சென்னை: செயற்கை இழைகள், விஸ்கோஸ் இழை களுக்குப் பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையால் பாதிப்பு ஏற்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். "இந்தியாவில் தயாரிக்கப்படாத, மூங்கில் மரத்தில் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும். இதற்கான உத்தரவுகளை மத்திய ஜவுளித்துறை பிறப்பிக்க வேண்டும்," என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தில் அமில வீச்சு: பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

கோவை: நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணவர் அமிலம் வீசியதால் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா என்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கவிதா (33 வயது) தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நகைப்பறிப்பு வழக்கில் கைதானார் கவிதா. அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று கோவை நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானார். அப்போது அங்கு வந்த கவிதாவின் கணவர் சிவா மனைவியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், மறைத்து வைத்திருந்த அமிலத்தை எடுத்து கவிதா உடல் முழுவதும் ஊற்றினார். இதில் படுகாயமடைந்த கவிதா உயிரிழந்தார்.

தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையைத் தொடங்கியது டாஸ்மாக்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்பனையைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படு வது தடுக்கப்படும் என அதன் நிர்வாகம் கூறியுள்ளது.