திருப்போரூர்/ காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் ஊராட்சியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 27 இருளர் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஆ.ர, ராகுல்நாத்திடம் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்பேரில், செங்கை கோட்டாட்சியர் இப்ராகிம் தலைமையில், திருப்போரூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பாலாம்மாள் நகரில் ஏழு பெரியவர்களும் மூன்று சிறுவர்களும் கோமான் நகரம் பகுதியில் ஒன்பது பெரியவர்களும் எட்டு சிறுவர்களும் என மொத்தம் 11 சிறுவர்கள், ஆறு பெண்கள் உட்பட 27 பேர் மரம் வெட்டுதொழிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை மீட்டு செங்கல்பட்டு கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இவர்கள் கல்பாக்கம், வேலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வேலிகத்தான் மரம் வெட்டும் தொழிலுக்காக இங்கே கொத்தடிமைகளாக தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்த பாலு என்பவர் மீது வருவாய்த் துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க உதவி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பி.எஸ்.என்.எல்.சார்பில் 155214 எண்ணும் கட்டணமில்லா உதவி தொலைபேசியான 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மா. ஆர்த்தி அறிவித்துள்ளார்.

