சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 பாம்புகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாம்புகளைக் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகள், விமான நிலையத்தில் வழக்கமான சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது பெண் பயணி ஒருவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது ஒரு பைக்குள் ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து அசைவது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பையை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது சிறிய அளவிலான நெகிழிக் குடுவைகளுக்குள் 22 பாம்புகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் ஒரு பச்சோந்தியும் அந்தப் பைக்குள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்மணி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச் சட்டம் 1962, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றின் கீழ் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அப்பெண்ணின் பையில் இருந்து பாம்புகள் வெளியே எடுக்கப்படும் காட்சிகள் கொண்ட காணொளி ஒன்றையும் சுங்கத்துறை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

