நெல்லை: போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் தேனி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (31 வயது). இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷின் பாட்டனார் இந்த நிலத்தை ஃபிலிப் என்பவருக்கு விற்பனை செய்ய முற்பட்டார். நிலத்தை வாங்க முன்பணம் கொடுத்தார் ஃபிலிப். எனினும் இதற்காக செய்துகொண்ட ஒப்பந்தப்படி மீதிப்பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் ஒப்பந்தம் ரத்தானது.
அதன் பின்னர் ஜெயப்பிரகாஷின் பாட்டனாரும் தந்தையும் இயற்கையாக மரணம் அடைந்தனர். அதையடுத்து பூர்வீக நிலம் ஜெயப்பிரகாஷ் வசமானது.
இந்நிலையில், அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான லோகநாதன், ஜெயப்பிரகாஷின் நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஜெயப்பிரகாஷ் இதற்கு மறுத்துவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அதே நிலத்தை சென்னையைச் சேர்ந்த அந்தோனி டாமினிக் என்பவர் போலியான ஆவணங்கள் தயாரித்து, மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கு ஆளான ஜெயப்பிரகாஷ், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நில அபகரிப்பு வழக்குப் பதிவானதை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தி வந்தது.
அதன் முடிவில் லோகநாதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டது அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.