நெல்லை: தமது அரசுப் பணி சார்ந்த கட்டமைப்பில் எந்தவொரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தத்துடன் தாம் பணியில் இருந்து விலகுவதாக கிராம நிர்வாக அலுவலர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் பிரிதிவிராஜ் சாஸ்தாவுக்கு அவரது தந்தை காலமானதையடுத்து கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல், லஞ்சம் பெறாமல் பணியாற்றி வந்துள்ளார். எனினும் அரசுத்துறைகளில் லஞ்சம் பெறுவது நீடிப்பதாகவும் நல்ல கொள்கையுடன் அரசுப்பணியில் சேர்பவர்களும்கூட புற அழுத்தம் காரணமாக தங்கள் கொள்கைகளை தாங்களே கரைத்துக்கொண்டு பணமே குறி என்று மாறிவிடுவதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"அரசியல், அதிகாரிகளின் அழுத்தம் ஆகியவற்றுடன், கொலை, கொள்ளை செய்பவர்களின் அழுத்தத்திற்குக்கூட அடிபணிந்து தங்களின் தடம் மாறிப்போகும் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
"அவர்களுக்கு இடையே எதுவாகினும் உயிர் போகினும் நேர்மை கைவிடேன் என்ற நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மையாளர்கள் என்ற சிறுபான்மைக் கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி," என்று பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் கிராம நிர்வாக அலுவலர் பதவியில் இருந்து விலகுவதாகவும் உடல்நலம் பாதித்து தன் மனைவி, வயதான தாய், ஒரு மகள், ஒரு மகன் ஆகியோரின் நலன் கருதி தம்மால் 24 மணி நேரமும் நேசிக்கப்பட்ட ஒரு பணியைத் துறந்து செல்வதாகவும் பிரிதிவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
"கிராம நிர்வாக அலுவலராய் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன்.
"எனினும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் என்னை தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்று பிரிதிவிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

