வன்கொடுமைக்கு ஆளான 14 வயதுச் சிறுமி: ஐந்து பேர் கைது
சேலம்: பதினான்கு வயதுச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய ஐந்து பேரை சேலம் காவல்துறை கைது செய்துள்ளது. தனது மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை யினர், துரித நடவடிக்கை மேற்கொண்டு ஐந்து பேரை அடுத்தடுத்து கைது செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நல்ல பாம்பை மாலையாகப் போட்டவாறு காப்பிக் கடைக்கு வந்த முதியவர்
சென்னை: நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்து மாலையாக அணிந்து வீதியில் சென்றவரைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். செங்கோட்டையைச் சேர்ந்த 70 வயதான ஜப்பார் என்ற முதியவர் நேற்று முன்தினம் காலை தேநீர்க் கடைக்குச் சென்றார். அவரது கழுத்தில் நல்ல பாம்பு ஒன்றை மாலைபோல் போட்டிருந்ததைக் கண்டு தெருவில் சென்றவர்கள் விலகி ஓடினர். இறுதியாக தேநீர்க் கடையைச் சென்றடைந்தபோது அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையில், வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் முதியவர் ஜப்பார் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வருவதும் பாம்பு பிடிப்பதை அவர் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.
திருச்சுழியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
விருதுநகர்: அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்சுழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 மற்றும் 17 வயதுள்ள இரு மாணவர்களும் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றபோது அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்புப் பெட்டி கீழே விழுந்துள்ளது. இருவரும் அதைத் தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

