ஓசூர் அருகே சிப்காட் அமைக்க
எதிர்ப்பு: 115வது நாளாக போராட்டம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5வது சிப்காட் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சிறு, குறு விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் விவசாயிகளிடம், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று 115வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
'தானியங்கி மது விற்பனையை
நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை'
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம், தானியங்கி மதுபான விநியோக இயந்திரங்களை சோதனை முறையில் நான்கு மதுபானக் கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இயந்திரங்களில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கடன் அட்டை அல்லது பற்று அட்டை மூலம் பணத்தை செலுத்தினால், மதுபானம் கிடைக்கும்.
இந்நிலையில் தானியங்கி மது விற்பனைக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களை வைத்தால் திமுகவிற்கு மோசமான பெயர் தான் வரும் என்று கூறினார்.
தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அரசு மூட வேண்டும் என்று கூறிய அவர், இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

