கிருஷ்ணகிரி: 'காணத்தக்க கிருஷ்ணகிரி' திட்டத்தின் கீழ், மல்லசந்திரம் புராதனச் சின்னங்களை ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வுக் குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
'காணத்தக்க கிருஷ்ணகிரி' என்ற பெயரிலான விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், முதல் நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு மல்லசந்திரம் புராதன சின்னங்களை, ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள், கலாசார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அனைவரும் அறிந்துகொள்ளவும், அவற்றைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொல்லியல் எச்சங்களைக் கொண்ட மாவட்டங்களில் முதன்மையானது கிருஷ்ணகிரி மாவட்டமாகும்.
புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை, தொடர்ச்சியான வரலாற்றை நம் மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பே, இப்பகுதி மக்கள் இரும்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதை, பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறை அகழாய்வு வெளிப்படுத்தியது.
இரும்பு காலத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது, இம்மக்கள் இறந்தோரின் நினைவாக எழுப்பியுள்ள பெருங்கற்படை சின்னங்களாகும். இச்சின்னங்களில் முதன்மையானது கல்திட்டைகளாகும். நூற்றுக்கும் மேற்பட்ட இத்தகைய கல்திட்டைகளைக் கொண்ட இடம்தான், மல்லசந்திரத்தின் மோரல் பாறையாகும். மூன்று அல்லது நான்கு பக்கமும் நிறுத்தப்பட்ட பலகை கற்களின் மீது, ஒரு மூடுகல்லை வைத்து, வீடுபோல் உருவாக்கப்படுவதே கல்திட்டையாகும்.
இக்கல்திட்டையைச் சுற்றி கற்கள் நடப்பட்டு, இடையில் கற்களை அடுக்கிய கட்டுமானம் இங்கு காணப்படுகிறது. நடுவே பெரிய கல் திட்டையும், சுற்றிலும் சிறிய கல் திட்டைகளும் இருப்பதைக் கொண்டு பார்க்கும் போது, நடுவில் உள்ளது முக்கிய தலைவனுக்கானது. அதனைச் சுற்றியுள்ளது அவனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கானது என்பது போல் உள்ளது. இக்கல் திட்டைகளின் வடிவமைப்பானது, பின்னால் எழுந்த கோயில்களுக்கு அடித்தளமாய் இருப்பதை, ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கல் திட்டைகள் சிலவற்றில் வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன. பிற்கால நடுகற்களின் முன்னோடிகளாக, இந்த ஓவியங்கள் கருதப்படுகிறது. தமிழகத்தில் ஒரே இடத்தில், அதிக கல்திட்டைகள் உள்ள இடம், மல்லசந்திரம் என்பது பெருமைக்கு உரியதாகும். அவற்றைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் "காணத்தக்க கிருஷ்ணகிரி" என்ற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். அடுத்த பயணமாக வருகிற 6ஆம் தேதி (சனிக்கிழமை) தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையை இக்குழு பார்வையிட உள்ளது. இந்தச் சுற்றுலாப் பயணத்தில் வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

