நான்கு ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் நட்டம்
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நாள்தோறும் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இத்தகவல் உள்ளது.
தமிழகத்தில் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் மேற்கொள்ள முடிகிறது.
இந்நிலையில், எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் நாள்தோறும் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.25 ஆயிரம் கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் அன்றாட இழப்பு சராசரியாக ரூ. 9 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.15 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.12,007 கோடி வருவாய் ஈட்டியுள்ளன என்றும் அதில் பயணச்சீட்டு விற்பனை மூலம் 6,705.69 கோடி கிடைத்துள்ளது என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் உள்ளிட்ட பிற வழிகள் மூலம் 5,256.86 கோடி ரூபாய் கிடைத்தது.
"கடந்த ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனங்களால் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்துக்கு மட்டுமே ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த செலவில் 53 விழுக்காடாகும்.
"எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28% ஆகும்," என அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.
பெண்களும் மாற்றுத் திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் மேற்கொள்ள இயலும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.
கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக போக்குவரத்துக் கழக நிறுவனங்களுக்கு அன்றாட வருவாய் குறைந்திருந்த நிலையில், கடந்த 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அன்றாட வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்வு கண்டுள்ளது.
நஷ்டத்தையும் செலவுகளையும் ஈடுகட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருகிறது.
போக்குவரத்துக் கழகங்களில் முன்பு 19,290 பேருந்துகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது 18,723ஆக குறைந்துள்ளது.

