செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

காவல்துறையில் தீவிரவாத எதிர்ப்பு படை: கண்காணிப்பு தீவிரம்

சென்னை: தமிழகக் காவல்துறையில் தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழை மரங்களைச் சாய்த்த கரடி

நெல்லை: களக்காடு அருகே கரடி ஒன்று நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும், குலை தள்ளி அறுவடைக்குத் தயாராகி வந்த வாழைகளை அக்கரடி சாய்த்ததால் விவசாயிகள் கவலையில் மூழ்கி உள்ளனர். நேற்று முன்தினம் கீழவடகரையைச் சேர்ந்த பாலன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத் துக்குள் புகுந்த கரடி, 15 வாழை மரங்களைச் சாய்த்தது. கரடி நடமாட்டத்தால் பகல் நேரங்களில்கூட விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோடை விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் குவியும் மக்கள்

சென்னை: கோடை விடுமுறை தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழக சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து கடலில் குளிக்கவும் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக மக்கள் கூட்டம் அதிகரித்ததால் பழ, குளிர்பான வியாபாரிகளுக்கு லாபம் அதிகரித்துள்ளது.

நெல்லை ரயில் நிலையம் சாதனை

நெல்லை: நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையங்களுக்கான தர நிர்ணயத்தில் அது முன்னேற்றம் கண்டுள்ளது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் தர நிர்ணயப் பட்டியலில் என்எஸ்ஜி-1 என வகைப்படுத்தப்படுகிறது. நூறு முதல் ஐநூறு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டினால் என்எஸ்ஜி-2 பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர், நிதி அமைச்சர் சந்திப்பு

நெல்லை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். முதல்வர் குடும்பம் குறித்து நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஒலிப்பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றி யமைக்கப்பட உள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளி யானது. இத்தகைய சூழலில் முதல்வரை சந்தித்துள்ளார் நிதி அமைச்சர். எனினும் இது வழக்கமான சந்திப்பு என அரசுத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.