டிஜிபி: கஞ்சா வியாபாரிகள் குறித்து தகவல் தெரிவித்தால் வெகுமதி
சென்னை: தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0' நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது காவல்துறை.
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அது குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும் தகவலுக்கேற்ற வெகுமதி வழங்கப்படும் என்றும் தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கஞ்சா, குட்கா, போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதன்படி 'கஞ்சா வேட்டை 4.0' நடவடிக்கை தொடங்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கஞ்சா வேட்டை 1.0 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதேபோல் மேலும் இருமுறை கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
காவல்துறையின் நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 47,248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், 20,014 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 25,721 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"இத்தொழிலில் ஈடுபட்ட 5,723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் கடந்த 30ஆம் தேதி இரவு முதல் நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின்போது குன்றத்தூர் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 22 டன் குட்கா கைப்பற்றப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
"அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்று டிஜிபி சைலேந்திரபாபு மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை அருகே உள்ள பெரியமேடு பகுதியில் எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளையர் ஒருவர் கைதாகியுள்ளார்.