மே 6ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 6ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அம்மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழை தொடரும். சென்னையில் இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. "நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது," என்றார் பாலச்சந்திரன்.
போலி பொதுக்குழு உறுப்பினர்கள்: பன்னீர்செல்வம் எச்சரிக்கை
சென்னை: அதிமுக பொதுக்குழு என்ற பெயரில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டம் போலி பொதுக்குழு என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், போலி பொதுக்குழு உறுப்பினர்களுடன் அதிமுகவினர் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளார். அண்மையில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்தன. தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. எனினும் பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து பழனிசாமி தரப்புக்கு குடைச்சல் அளித்து வருகிறது.
புற்றுநோய்க் கட்டியைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
சென்னை: மூளையிலும் முதுகுத் தண்டுவடப்பகுதியிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை (க்ளையோ பிளாஸ்டோமா), கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டின் மிக உயர்ந்த கல்வி அமைப்புகளில் ஒன்றான ஐஐடி இத்தகவலை அறிக்கை வழி தெரிவித்துள்ளது. "அக்குறிப்பிட்ட புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும், எந்த வகையான சிகிச்சையை நோயாளிக்கு அளிக்கலாம் என்பதையும் இதன் மூலம் கண்டறியலாம் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்," என விஞ்ஞானிகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நச்சு வாயு: இரு தொழிலாளர்கள் பலி
திருவள்ளூர்: நச்சு வாயு தாக்கியதில் தொழிலாளிகள் இருவர் இறந்த சம்பவம் திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அச்சமயம் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இரு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கி அதைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். உயிரிழந்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இரண்டு கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: இலங்கை, குவைத், அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.34 கோடி மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்க அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 66.85 லட்சம் பேர் பயணம்
சென்னை: கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 66.85 லட்சம் பேர் பயணம் செய்துள் ளனர். ஆக அதிகமாக கடந்த 28ஆம் தேதியன்று 268,680 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 2,339,724 பேர் கியுஆர் குறியீட்டையும் 398,3119 பேர் பயண அட்டைகளைப் பயன்படுத்தியும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

