சென்னை: குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் நாடு தழுவிய அளவிலான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி சென்னையில் உலக சாதனை முயற்சியாக, 500 இளம் இசைக் கலைஞர்கள் கீபோர்டு வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 58,289 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் தமிழகத்தில் மட்டும் 2021-22ஆம் ஆண்டில் 2,887 குழந்தை தொழிலாளர்களை அரசு மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"அந்த வகையில் குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது மிகப்பெரிய குற்றம் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகள் வேலை செய்வதை மாணவர்கள் பார்த்தால், அதை தங்கள் பெற்றோரிடம் சொல்லி, அவர்கள் மூலமாக தொழிலாளர் நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது குழந்தை தொழிலாளர்களை மீட்க பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.
"உலக அளவில் சுமார் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் ஒன்பது கோடி பேர் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலை அண்மையில் அனைத்துலக அமைப்பு ஒன்று வெளியிட்டது. இந்த 16 கோடி குழந்தை தொழிலாளர்களும் ஒட்டுமொத்த உலகையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ற கல்வி அறிவை வழங்க வேண்டியது அரசுகளின் கடமை என்று குறிப்பிட்ட அவர், கல்வி கற்பது குழந்தைகளின் உரிமை, அதை யாரும் பறித்துவிடக்கூடாது என்றார்.

