திருச்சி: திருவாரூர் அருகே வீடு ஒன்றில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சாமி சிலைகள், காலச் சக்கரம், பழங்காலச் செப்பு நாணயங்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, தந்தை-மகனைக் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கரைவீதியைச் சேர்ந்தவர் கண்ணன், 53. இவரது மகன் சூர்யா, 23. இருவரும் உணவகம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிலையை வாங்க வந்தவர்கள் போல் நடித்து நேற்று அதிகாலையில் இவர்களது வீட்டிற்குள் நுழைந்து திருச்சியில் இருந்து வந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 1,000 ஆண்டுகள் பழமையான தன்வந்திரி சிலை, ஒன்றேகால் அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் சிலை, 1010 ஆண்டுகள் பழமையான இரண்டு நாணயங்கள், ஒரு காலச்சக்கரம் ஆகியவற்றை மீட்டனர். இந்தச் சிலைகள், செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என நம்பப்படுகிறது.

