சென்னை: தலைநகர் சென்னை யில் காலி மனைகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வரும் சூழலில், உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்வதில் கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, கிண்டி, கொட்டிவாக்கம் பகுதிகளில் 20 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற் பனை செய்யும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அந்நிறுவனங்கள் மும்முரமாகி உள்ளன.
இதுகுறித்து நகர சீரமைப்பு வல்லுநர்கள் கூறுகையில், "விமான நிலைய ஆணையத்தின் தடையின்மைச் சான்றிதழ் கிடைத்துவிட்டால் அடுக்குமாடி கட்டடங்களை எழுப்புவதில் எவ்வித சிக்கலும் இருக்காது.
"சென்னையில் காலி நிலங் கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் சூழலில், இதுபோன்ற உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதித்தால்தான் மக்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்," என்றனர்.
சென்னையில் 1959ல் 14 தளங் களுடன் கட்டப்பட்ட எல்ஐசி அலுவலகம் மட்டுமே உயரமான கட்டடமாக இருந்து வந்தது.
இதையடுத்து, கடந்த 2008ல் கட்டுமானத் திட்டங்களுக்கான உயரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உயரமான கட்டடங்களைக் கட்டு வதற்கு கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.
எனினும், விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாடு உள்ளிட்ட சில காரணங்களால் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்கள் கட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், விதிமுறைகள் தளர்வால் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இங்கு 20 மாடி கொண்ட அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்ட முன்வந்துள்ள தாகத் தெரிவித்துள்ளன.
சென்னை கொட்டிவாக்கத்தில் 636 வீடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவற்றில் இரண்டு கட்டடங்கள் 20 தளங்களுடனும் ஒரு கட்டடம் 39 மாடிகளுடனும் 'எலிவேட்-21' என்ற பெயரில் 21 மாடிகள் உடைய அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்பட உள்ளதாக கட்டுமானத் துறையினர் கூறி யுள்ளனர்.
அத்துடன், கிண்டி ராஜ்பவன் அருகில் வேளச்சேரி செல்லும் சாலையில் 20 மாடிக் குடியிருப்பு கட்டத் திட்டமிட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் 45 மாடி களுடன் குடியிருப்புக் கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.


