கோவை: சொந்த மகள்போலப் பழகி 100 பவுன் நகை, இரண்டரை கோடி ரூபாய் பணத்தைக் களவாடிச் சென்ற இளம்பெண் வர்ஷினியை(படம்) காவலர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 63. இவரது கணவர் வெங்கடேசன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதை அடுத்து, ராஜேஸ்வரி மட்டும் தனி ஒருவராக வீட்டில் இருந்தபடியே சொத்து முகவராகத் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிங்காநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி, 26, என்ற பெண்ணுடன் ராஜேஷ்வரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த தொழில்முறை பழக்கத்தைப் பயன்படுத்தி ராஜேஸ்வரியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் வர்ஷினி.
தன் மூலம் பலருக்கும் நிலத்தை வர்ஷினி விற்பனை செய்தும் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்குச் சென்று அவ ருக்கு சாப்பிட ஏதாவது உணவைக் கொண்டு சென்று கொடுத்து வந்துள்ளார்.
அத்துடன், ராஜேஸ்வரியைத் தினமும் கைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மகளைப் போல் அக்கறையுடன் நலம் விசாரித்து பழகி வந்துள்ளார்.
அதன்பின்னர், வர்ஷினி தனக்குத் தெரிந்த இடைத்தரகர்கள் எனக் கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் ஆகிய மூவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராஜேஸ்வரிக்கு இட்லியுடன் நாட்டுக்கோழி குழம்பு வைத்து உணவு சாப்பிடக் கொடுத்துள் ளார். அதைச் சாப்பிட்ட ராஜேஸ்வரி மயங்கியவுடன் ரூ.2.5 கோடிப் பணம், 100 பவுன் தங்க நகைகள், ஐபோன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். பதறியடித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ராஜேஷ்வரி.
அருண்குமார், பிரவீன், சுரேந்தர் ஆகிய மூவரும் கைதாகினர். வர்ஷினியை தேடிவருகின்றனர்.

