சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் புயல் சின்னம் உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவக்கூடும் என்றும் இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் வடக்குத் திசையில் நகரக்கூடும் என அம்மையம் தெரிவித்தது.
"அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். எட்டாம் தேதியன்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது," என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அடுத்த நான்கு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுவையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 7ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் மீனவர்களுக்காக விடுத்த எச்சரிக்கையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் மே 7ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அம்மையம் அறிவுறுத்தி உள்ளது.

