தி.மலை: அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வழக்கு தொடர்பில் முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித்தை தனிப்படையினர் ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர்ப் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தது.
ஏடிஎம் மையங்களில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்களுக்கு ஆசிப் ஜாவித் தான் மூளையாகச் செயல்பட்டார் என்றும் பாழடைந்த கட்டடத்தில் பதுங்கி இருந்த அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்ததாகக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிப் ஜாவித்திடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கார் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் விமானம் மூலம் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியது.

