செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

சென்னை: தனது தேர்தல் வேட்பு மனு, பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட சில தகவல்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவாகி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தவறான தகவல்களைத் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டு, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின்போதே காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு மேற்குறிப்பிட்ட தகவலைத் தெரிவித்துள்ளது.

'சித்த மருத்துவ பல்கலைக்கு அனுமதி கோரி ஆளுநருக்கு ஏழு முறை கடிதம்'

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி ஆளுநருக்கு ஏழு முறை அது அனுப்பப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அம்மசோதாவை மறுத்தோ அல்லது வேண்டாம் என்றோ ஆளுநரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

"தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறைக் கட்டமைப்பை மேம்படுத்த 1136 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களின் விருப்பமான சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தருவார் எனக் கருதுகிறோம்," என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

'கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு

சென்னை: சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'புது தேர்வு வாரியம் தேவையற்றது'

சென்னை: தமிழகத்தில் அரசுப் பணிகளுக்குப் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது தேவையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், புதிய தேர்வு வாரியம் அமைக்கப்பட்டால்

அந்நடவடிக்கை அரசுப் பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.