பூனைக்குட்டி வெளியே வந்ததாக அதிமுக விமர்சனம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து அதிமுக பிரமுகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியைக் காண பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்தனர். அவர்களில் சபரீசனும் ஓ.பன்னீர் செல்வமும் அடங்குவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சபரீசன் மஞ்சள் நிறத்தில் 'டிசட்டை' அணிந்திருந்தார்.
அவரும் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து பேசும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இந்தச் சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்து' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியை நேரில் கண்டு ரசிக்க, தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், லோகேஷ் கனகராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் உச்சத்தை அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முதல்வர் மருமகன் சபரீசன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பை அடுத்து, திமுகவில் இணைய ஓபிஎஸ் திட்டமிடுகிறாரா என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதிமுகவில் தனி அணியாகச் செயல்பட்டு வரும் ஓபிஎஸ் தரப்புக்கு திமுக தலைமை மறைமுகமாக ஆதரவு அளிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் டுவிட்டர் பதிவும் அரசியல் களத்தில் புதுச் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

