சென்னை: அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தைக் கைப்பேசி செயலி மூலம் கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இச்செயலியை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் 114,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.33.56 கோடி செலவிடப்படுகிறது.
மாணவர்களுக்கு உப்புமா, கிச்சடி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்படுன்றன. இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் கூடுதல் மாணவர்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
இனி தமிழகத்தில் உள்ள 30,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இதன் மூலம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்றும் அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.
இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பபடும் என்றும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மாணவர்களுக்கு இனி 13 வகையான உணவுகள் பரிமாறப்படும். இவற்றைச் சமைக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
"இதற்காக அக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இரு நாள்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மையங்களில் இத்திட்டம் தொடர்பான நிகழ்வுகள் கைப்பேசி செயலி மூலம் கண்காணிக்கப்படும்.
மையப் பொறுப்பாளர், புதிய செயலியில் புகைப்படங்கள், காணொளிகள், மற்ற விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்," என அதிகாரிகள் தெரிவித்தனர்.

