சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை (நீட்) எழுதிய மாணவிகள் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தவிப்புக்கு ஆளானதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நீட் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் இத்தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையத்துக்கு வந்த மாணவ, மாணவியர் தீவிரமாகச் சோதிக்கப்பட்ட பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆபரணங்கள் அணியக்கூடாது, குறிப்பிட்ட சில தலை 'கிளிப்'புகளைப் பயன்படுத்தக்கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் காதணிகள், மூக்குத்தி, மோதிரம், சங்கிலி, கொலுசு ஆகியவற்றைப் பல மாணவிகள் மையத்துக்கு வெளியே காத்திருந்த பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர்.
சில மையங்களில் மாணவிகள் தலைமுடியை விரித்தபடி விட்டிருந்தால் மட்டுமே தேர்வு மையத்துக்குள்அனுமதிக்கப்பட்டனர். இதனால் சடைபின்னலுடன் வந்த மாணவிகள் சங்கடத்துக்கு ஆளாகினர். எனினும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், சடைப் பின்னலுடன் வந்த மாணவிகள் தலைமுடியை விரித்துப் போட்டபடிதான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனால் ஏராளமான மாணவிகள் தலைவிரி கோலத்துடன் தேர்வு எழுதினர். மேலும் தடிமனான காலணி அணிந்து வந்தவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இடுப்புப் பட்டை, பெரிய அளவிலான சட்டைப் பொத்தான், கையிலும் கழுத்திலும் கட்டப்பட்ட கயிறு ஆகியவற்்றை அகற்ற வேண்டும் என மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சென்னையில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்று தேர்வு மைய பொறுப்பாளர்கள் கூறியதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அம்மாணவியைச் சோதனையிட்டபோது அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாகவும், அதன் காரணமாகவே உள்ளாடையை அகற்றி சோதனை நடத்த தேர்வு மைய அலுவலர்கள் முடிவு செய்ததாகக் கூறப்்படுகிறது.

