தமிழகக் காவல்துறை அதிரடி நடவடிக்கை; வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் கஞ்சா விற்பனை தலைதூக்கிவிடக் கூடாது என்பதை மனதிற்கொண்டு 'கஞ்சா வேட்டை 4.0' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைதாகியுள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைது நடவடிக்கை நீடிக்கும் என்றும் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
கைதானவர்களில் ஐந்து பெண்களும் அடங்குவர் என்றும் கைது நடவடிக்கையின்போது 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் டிஜிபி தெரிவித்தார்.
"கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் 15 டன் போதைப் பாக்குடன் (குட்கா), இரண்டு லாரிகளும் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.
"அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்றார் டிஜிபி சைலேந்திர பாபு.
காவல்துறை அறிவித்துள்ள சிறப்பு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் வழி பொதுமக்களும் கஞ்சா பதுக்கல், விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க பண வெகுமதி வழங்கப்படும் என்றும் டிஜிபி மேலும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பியதை அடுத்து 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது நூற்றுக்கணக்கான கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்.

