கர்கோன்: மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து பாய்ந்து விழுந்த விபத்தில் மூன்று குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் ஊன் காவல்நிலையப் பகுதியில் உள்ளது தங்கார்கோன் ஆற்றுப் பாலம். இப்பாலத்தில் நேற்றுக் காலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து பக்கவாட்டில் இருந்த தடுப்புச் சுவரை உடைத் துக்கொண்டு கீழே பாய்ந்தது.
தகவல் அறிந்ததும் அவசர சிகிச்சை வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கர்கோன் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
"இந்தூர் நோக்கி பேருந்து விரைந்து கொண்டிருந்தது. அப்போது, போராட் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. ஆறு முற்றிலும் வறண்டுகிடந்தது," என டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசிய கர்கோன் காவல்துறை அதிகாரி ராகேஷ் மோகன் சுக்லா தெரிவித்தார்.
கர்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, "விபத்தில் 22 பேர் உயிரிழந்துவிட்டனர்; 31 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர், பேருந்தைச் சுத்தம் செய்பவர் ஆகியோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலின்படி, ஓட்டு நரின் தூக்க கலக்கம் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

