இரண்டாவது நாளாக நீடிப்பு: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார்
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் சென்னையில் பரபரப்பு நிலவியது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அந்தச் சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.
தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் பரிசுச் சீட்டு விற்பனை மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக மார்ட்டின் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மார்ட்டினுடைய வீடு உள்ளிட்ட இடங்களிலும் அவருக்குச் சொந்தமான ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் மேலும் சில நகரங்களிலும் அவருக்குச் சொந்தமான இடங்களில் ஒரே சமயத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களின் தலைமை அலுவலகத்திலும் மார்ட்டினுடைய உறவினர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
பலமணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெறுவதை அறிந்த மார்ட்டின் தரப்பு வழக்கறிஞர்கள் பத்து பேர் அங்கு வந்து சேர்ந்தனர்.
தொழிலதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் என்பவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் தமிழக கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆவார்.
அண்மையில்தான் தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. அதையடுத்து மீண்டும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மார்ட்டினிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தச் சோதனை நடவடிக்கை முழுமை அடைந்த பிறகே அமலாக்கத்துறை விரி வான அறிக்கை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

