மூளைச்சாவு அடைந்த இளையரின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்
விருதுநகர்: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 25 வயது இளையரின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற இளையர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 29ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்க நேரிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன் வந்தனர். சீனிவாசனின் கல்லீரல், சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோள் எலும்பு ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு
சென்னை: தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்ட தாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வழக்குத் தொடுத்துள்ளார். அண்மையில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டி ருந்தார் அண்ணாமலை. அதில் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தாம் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலை மீது வழக்குத் தொடுத்துள்ளார் டி.ஆர்.பாலு. ஏற்கெனவே தமிழக முதல்வர் சார்பிலும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
'செழிப்பு' இயற்கை உரம் அறிமுகம்
சென்னை: 'செழிப்பு' என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. அதன் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஈரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்துக்கு 'செழிப்பு' எனப் பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து, லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில் நால்வர் பலி
சீர்காழி: டேங்கர் லாரி மீது அரசு சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகினர். 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்தப் பேருந்து திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சீர்காழி புறவழிச் சாலையில் விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் அதை வளைத்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதற்கிடையே குமரியில் அரசுப் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட மற்றொரு விபத்தில் ஆடல், பாடல் குழுவைச் சேர்ந்த நால்வர் பலியாகினர். ஏழு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

