கோவை: தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் கஞ்சா கடத்த லுக்கும் விற்பனைக்கும் உடந்தையாக இருந்ததாக ஒரு காவல் உதவி ஆய்வாளா் உட்பட ஒன்பது காவலா்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், 15 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தமிழக காவல்துறைத் தலைவர் சி.சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளையர்கள் மத்தியில் போதைப்புழக்கம் அதிகரிப்பதைத் தடுக்க இம்மாதம் 1ஆம் தேதி 'கஞ்சா வேட்டை 4.0' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதன்மூலம், கடந்த 10 நாள்களில் மாநிலம் முழுவதும் 16 பெண்கள் உட்பட 1,337 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவா்களில் 42 போ் வெளிமாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து 3,408 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 164 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஒன்பது காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 15 காவலா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு 'மெத்தாபெட்டமைன்' என்ற போதைப்பொருள் எளிதாகக் கிடைத்தது.
விசாரணையில், கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் தர், 32, கடத்தல் கும்பலுக்கு உதவியது அம்பலமானது. போதைப்பொருள்களை விற்கும் ரவுடிக் கும்பலுக்குப் பணத்தைப் பங்கிட்டுப் பிரித்துக்கொடுத்து வந்தது வழக்கறிஞர் ஆசிக், 30, என்பதும் தெரிந்தது.
போதைக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட காவலரும் வழக்கறிஞரும் கைதாகினர்.

