1,000 கோடி முதலீட்டில் 'ராயல் என்பீல்டு' பைக் தொழிற்சாலை
சென்னை: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்ஃபீல்டு ஆலை அமைய உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
69 கிலோ கேக் வெட்டிய பழனிசாமி
சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 69வது பிறந்தநாளை 69 கிலோ கேக் வெட்டி கடந்த வெள்ளியன்று கொண்டாடினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகள் கூறினர். பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என சென்னை மாம்பலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மண்சோறு உண்டனர்.
கிணற்றில் விழுந்த முதியவர் மூன்று நாள் கழித்து உயிருடன் மீட்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் முதியவர் ஒருவர் 120 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடலூரைச் சேர்ந்த பாவாடை என்பவர் புதுச்சேரி மடுகரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். தீயணைப்புத் துறையினர் முதியவர் பாவாடையைப் பத்திரமாக மீட்டனர்.

