சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த ஐந்து நாள்களா கத் தொடர்ந்து நடைபெற்று வந்த ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஒருவழியாக மீட்டுக்கொள்ளப்பட்டது.
போராட்டக் களத்திற்குச் சென்ற உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"முதல்வரின் கவனத்திற்கு உங்களது கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்," என அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து அவர்களது போராட்டம் முடிவிற்கு வந்தது.
ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சிபெற்ற 200 ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் ஐந்தாவது நாளாக நேற்று உண்ணாவிரதப் பேராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதன் காரணமாக மயக்க மடைந்த 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போராடும் ஆசிரியர்களுக்கு பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தன.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணி நிய மனம் செய்யப்படும்போது, மீண்டும் ஒரு தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இதனை ரத்துசெய்யவேண்டும் என்றும் பணிநியமனத்தின்போது மீண்டும் ஒரு முறை போட்டித்தேர்வு நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி ஆசிரியர்கள் காலவரையறையற்ற போராட்டம் நடத்தினர்.
"ஏராளமான பெண்ஆசிரியர்கள் குழந்தைகளுடன் இரவுபகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். எனவே, இதுகுறித்து மாநில அரசு கனிவோடு பரிசீலிக்கவேண்டும். விரைந்து முடிவெடுத்து, சிறப்பு அரசாணை பிறப்பிக்கவேண்டும்," என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமா வளமன் கேட்டுக்கொண்டார்.
"திமுக அரசு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவை அறிவிக்கவேண்டும் என மாநில அரசை வேண்டுகிறோம். இல்லையெனில் நாங் களும் போராட்டத்தில் பங்கேற்கும் சூழல் ஏற்படும்," என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

