சென்னை: திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவி பவித்ராவின் 'பேடிஎம்' கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் திருட்டு போனதை அடுத்து, திருடுபோன பணத்தை மாணவியிடம் வழங்க 'பேடிஎம்' நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பவித்ரா தொடர்ந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கியின் தரப்பில், 'மாணவியின் பணம் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. 'பேடிஎம்' கணக்கிலிருந்து காணாமல் போயிருப்ப தால் இதற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது' என வாதிட்டது.
பேடிஎம் தரப்பில், 'தங்கள் நிறுவனத்தில் பணப் பரிவா்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. வாடிக்கையாளருக்குத் தெரியாமல் பணப் பரிவா்த்தனை நடைபெறாது' என்றது.
ரிசா்வ் வங்கி தரப்பில், 'பேடிஎம், வாடிக்கையாளா்களுக்கு இடையிலான பரிவா்த்தனைகளில் தலையிடுவதில்லை' என விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "எந்தத் தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தைப் பறிகொடுத்துள்ளாா். வங்கி நிா்வாகமும் 'பேடிஎம்' நிறுவனமும் மாறி மாறி பழிபோடுவதை ஏற்கமுடியாது. இரு வாரங்களில் மாணவியின் பணத்தைத் திரும்ப அளிக்க 'பேடிஎம்' நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி உத்தரவிட வேண்டும்," என்று உத்தரவிட்டுள்ளாா்.

