மும்பை: கீழடியில் 9ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழகத் தொல்லியல்துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்பதாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட நான்காவது குழியில் இருந்து இதுவரை 127 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முன்னதாக அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்ட அவர், அகழாய்வைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 9ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி துவக்கி வைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த வீரணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டுள்ள. அவற்றுள் நான்காவது குழியில் இருந்து வண்ணப் பாசிகள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சுடுமண் பொம்மை, நெசவு தக்களி உள்ளிட்ட 127 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணி நடந்த இடம் தற்போது திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதைப் பார்வையிட ஏராளமானோர் தொடர்ந்து வருகை தருகின்றனர். விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. கீழடியில் இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு கட்ட அகழாய்வு நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மூலம் தமிழ், தமிழர்களின் தொன்மை குறித்து பல்வேறு அரிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதையடுத்து, அங்கு தொடர் அகழாய்வுப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் அறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். அதை ஏற்று, 9ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அப்பணிகள் கடந்த சில நாள்களாகத் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், கீழடியில் மேலும் பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு - 127 பொருள்கள் கண்டெடுப்பு
2 mins read
கீழடி. கோப்புப்படம் -