ஆறு பேரை ஏமாற்றிய 'திருமண ராணி' சிக்கினார்

ஆறு பேரை ஏமாற்றிய 'திருமண ராணி' சிக்கினார்

2 mins read
d82453b3-855b-492a-9270-929c1c3cda82
-

விழுப்புரம்: ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு பணம், நகைகளை பெற்று மோசடி செய்த பெண்ணை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மகாலட்சுமிக்கு 32 வயதாகிறது. அவருக்கும் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான மணிகண்டனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்கள். பின்னர் காதலர்களாக மாறி திருமணமும் செய்து கொண்டனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது குடும்பத்தார் திருமணத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று மகாலட்சுமி கூறியதை நம்பியுள்ளார் மணிகண்டன். மேலும், திருமணத்தின்போது எட்டு பவுன் நகைகளும் வாங்கித் தந்துள்ளார். ஆனால், திருமணமான ஒரு மாதத்துக்குள் தனது வீட்டில் சொத்துப் பிரச்சினை என்றும் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கூறி, மேட்டுப்பாளையத்துக்கு கிளம்பியுள்ளார் மகாலட்சுமி. அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் கவலையில் மூழ்கினார் மணிகண்டன். இந்நிலையில், வீட்டில் இருந்த நகைகளும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் மாயமானதால் மகாலட்சுமி மீது மணிகண்டன் குடும்பத்தாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு மகாலட்சுமியைக் கைபேசியில் தொடர்புகொண்ட போது தன்னை தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டியதைக் கேட்டு மணிகண்டன் அதிர்ந்து போனார். இதையடுத்து, காவல்துறையில் அவர் புகார் அளித்தார். அதன் பிறகே மகாலட்சுமியின் உண்மை முகம் வெளிப்பட்டது. 'திருமண ராணி' என்று குறிப்பிடும் வகையில், அவர் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது அம்பலமானது. தனது வயது, குடும்பப் பின்னணி ஆகியவற்றை மறைத்து, ஆண்களை மயக்கி திருமணம் செய்துகொள்ளும் அவர், அடுத்த சில நாள்களிலேயே பணத்தையும் நகைகளையும் சுருட்டிக்கொண்டு ஓட்டம்பிடித்துள்ளார். மணிகண்டன் அவரது வலையில் சிக்கிய ஐந்தாவது நபர் ஆவார். ஆறாவதாக சேலத்தில் உள்ள ஒருவரை மயக்கி திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் காவல்துறையில் சிக்கியுள்ளார். மகாலட்சுமிக்கு 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் பல ஆண்களை ஏமாற்றி உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.