முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

2 mins read

சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றத்தை அடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதயசந்திரன், அமுதாராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக விரைவில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், நிதித் துறை கூடுதல் செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்தகாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை முதல்வரின் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த உதயசந்திரன், தற்போது நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், உள்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த கோபால் தமிழக விஜிலென்ஸ் ஆணையராகவும் இதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பணித் துறைச் செயலர் க.மணிவாசன் சுற்றுலாத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப் பணித் துறை செயலாளர் ஆகியுள்ளார். இதேபோல் மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.